தேசிய அடையாள அட்டை பணி தபால் நிலையங்களில் திடீர் நிறுத்தம்

 தபால் நிலையங்கள் மூலமாக தேசிய அடையாள அட்டை பெறுவதற்காக விண்ணப்பிக்கும் பணி, தமிழ்நாட்டில் நேற்று முதல் முன்னறிவிப்பின்றி திடீரென நிறுத்தப்பட்டுள்ளது.
குடும்ப அட்டை, வாக்காளர் அடையாள அட்டை, வருமானவரி கணக்கு அட்டை என பல அடையாள அட்டைகள் நாடு முழுவதும் ஒரே மாதிரியாக இருந்தாலும், புதிதாக தேசிய அடையாள அட்டை(ஆதார்) வழங்க மத்திய அரசு முடிவு செய்தது. தமிழகத்தில் தபால் நிலையங்கள் மூலமாக விண்ணப்பிக்கும் பணி தொடங்கியது. சென்னையில் உள்ள அண்ணா சாலை தலைமை தபால் நிலையத்தில், 2011 அக்டோபர் 25ம் தேதி தொடங்கியது. தொடர்ந்து நவ.1ம் தேதி ராஜாஜி சாலை பொது அஞ்சலகம், மயிலாப்பூர் தலைமை அஞ்சலகம், தி.நகர் தலைமை அஞ்சலகம் ஆகியவற்றுக்கு விரிவுபடுத்தப்பட்டது.

அதே ஆண்டு நவம்பர் 3வது வாரத்தில் மாவட்ட தலைநகரங்களிலும், பிறகு மற்ற தலைமை அஞ்சலகங்களிலும் விரிவுபடுத்தப்படும் என்று  அஞ்சல்துறை அதிகாரிகள் விழாவில் அதிகாரிகள் தெரிவித்தனர். மேலும், ஒவ்வொரு அஞ்சலகத்திலும் தினமும் 60 பேருக்கு அடையாள அட்டை வழங்கப்படும். 2012 மார்ச்க்குள் 2 லட்சம் பேருக்கு அடையாள அட்டை வழங்கப்படும் என்றும் குறிப்பிட்டனர்.

ஆனால் காஞ்சிபுரம், வேலூர் உட்பட பல்வேறு நகரங்களில்  விண்ணப்பம் பெறுவதற்கான கருவிகள் பொருத்தப்பட்டதோடு சரி. புதுச்சேரியில் விண்ணப்பங்கள் பெறப்பட்டன.
அதேநேரத்தில் அடையாள அட்டை வழங்கப்பட்ட இடங்களில் நல்ல வரவேற்பு. தினமும் 60 பேரிடம்தான் விண்ணப்பம் பெறப்படும் என்பதால், தினமும் ஏராளமானவர்கள் திரும்பிச் செல்வதும் வாடிக்கையாக இருந்தது. சில அஞ்சலகங்களில் ஒரு மாதத்துக்கு டோக்கன் கொடுக்கப்பட்டது. அண்ணா சாலை அஞ்சலகத்தில் விஐபிகளுக்கு தனி மையம் திறக்கப்பட்டது. விண்ணப்பங்கள் பதிவு செய்யும் பணியில் பெங்களூரைச் சேர்ந்த தனியார் தொழில்நுட்ப நிறுவன ஊழியர்கள் ஈடுபட்டு வந்தனர்.

இதற்கிடையே, தேசிய அடையாள அட்டை வழங்குவது தொடர்பாக மத்திய அமைச்சகங்களிடையே வெளிப்படையாக மோதல் ஏற்பட்டது. ஏற்கனவே, பல்வேறு அடையாள அட்டைகள் இருக்கும்போது, தேசிய அடையாள அட்டை வழங்குவது தேவையற்ற செலவினம் என்றும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. அதுமட்டுமின்றி, வங்கி கணக்கு விவரம் உள்ளிட்ட தனிப்பட்ட நிதி விவரங்களையும் விண்ண்ப்பத்தில் குறிப்பட வேண்டும் என்பதற்கும் பல்வேறு தரப்பில் எதிர்ப்பு இருந்தது. இந்த பிரச்னை விரைவில் தீர்க்கப்படும்  என்று சில நாட்களுக்கு முன்பு பிரதமர் மன்மோகன்சிங் தெரிவத்திருந்தார்.

இந்நிலையில், தேசிய அடையாள அட்டை வழங்குவதற்கான விண்ணப்பங்கள் பெறும் பணி திடீரென நிறுத்தப்பட்டுள்ளது. சென்னையில் விண்ணப்பங்கள் பெறும் அஞ்சலகங்களில், Ôதேசிய அடையாள அட்டை பதிவு செய்யும் பணி 7&2&12 முதல் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது என்று அறிவிப்பு செய்யப்பட்டுள்ளது. இதனால், அடையாள அட்டைக்கு விண்ணப்பிக்க வந்தவர்கள ஏமாற்றத்துடன் திரும்பினர்.

இதுகுறித்து, தமிழ்நாடு அஞ்சல் வட்ட அதிகாரிகளிடம் கேட்டதற்கு, டெல்லியில் இருந்து, தேசிய அடையாள அட்டைக்கான பதிவை தற்காலிகமாக நிறுத்துமாறு தெரிவித்திருந்தனர். அதனால் நிறுத்தியிருக்கிறோம். வேறு காரணங்கள் ஏதும் தெரியாது. மீண்டும் உத்தரவு வந்ததும்  விண்ணப்பம் பெற ஆரம்பிப்போம் என்றார்.  ஆனால், விண்ணப்பங்கள் பெறுவது மற்றும் அடையாளங்கள் பதிவு செய்வதற்கான செலவினங்களுக்கு நிதி ஏதும் வராததால் நிறுத்தப்பட்டுள்ளது என்று கூறப்படுகிறது.


0 comments:

Post a Comment

உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் பதியப்படாது.

பொது இடத்தில் தங்கள் கருத்துகளைப் பதியும்போது அல்லாஹ் நம்மைக் கண்காணித்துக் கொண்டுள்ளான் என்பதை மனதில் இருத்தி,தனிப்பட்ட முறையில் எவரையும் புண்படுத்தாத வகையில் தங்கள் கருத்துகளைப் பதியுங்கள்.

கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

புரிதலுடன் கூடிய உங்களது ஒத்துழைப்புக்கு நன்றி!