நமது மக்களிடத்தில் இன்னும் விழிப்புணர்வு சரிவர ஏற்படவில்லை என்று தான் தோன்றுகிறது. அதற்கு சான்றாக பல சம்பவங்களை தினமும் காண்கின்றோம். அலட்சியப்போக்கும், அறியாத் தன்மையும், மெத்தனப்போக்கும், அதிகம் இருந்து வருகிறது. எதுவுமே வருமுன் காப்போம் என்று நினைப்பதில்லை. வந்தபின் தான் முயற்சிக்கிறோம். நாம் எல்லா விசயத்திலும் விழிப்புணர்வுடன் செயல்பட்டால் விபத்துக்கள், உயிரிழப்பு, உடைமை, பணம் இழப்பு, தேவையில்லா பிரச்சனைகள், மன உலைச்சல், சுற்றுச்சூழல் சுகாதாரம் என்று எல்லா நிலையிலும் நாம் நிம்மதியாக வாழலாம்.
அதன் தாக்கமாக எனக்குத்தெரிந்த 10 டிப்ஸ்கள் இதோ...
1. நாம் அலைபேசிக்கு அழைக்கும் போது மறுபுறத்தில் பதில் இல்லை என்றாலோ அல்லது பேசுவதை தவிர்க்க துண்டிப்பு செய்தாலோ மீண்டும் மீண்டும் தொந்தரவு செய்யக்கூடாது. [ ஏன் என்றால் ஒரு சமயம் நீங்கள் அழைத்த நபர் வழிபாட்டுத்தளங்களில் இருக்கலாம் அல்லது அலுவலகத்தில் வேலையாக இருக்கலாம். அல்லது முக்கிய நபர்களுடன் சந்தித்து உரையாடிக்கொண்டு இருக்கலாம். அல்லது உங்களுக்கு பதில் தரமுடியாத சூழ்நிலையில் இருக்கலாம் பிறகு நீங்கள் அழைத்த எண்ணை பார்த்து விருப்பம் இருந்தால் மறுபுறத்திலிருந்து அழைப்பார்கள் ]
2. தூங்குவதற்கு முன் அல்லது வீட்டை பூட்டி விட்டு வெளியிலோ, வெளியூரோ செல்வதற்கு முன் வீட்டின் முன்புறம் பின்புறம் மேல்தளம் மற்ற நாம் முக்கியமாக உபயோகப்படுத்தும் அறைக்கதவுகள் யாவும் சரியான முறையில் தாழ்பாள் போட்டு இருக்கிறோமா என்று சரி பார்த்து கொள்வது பாதுகாப்பாக இருக்கும். [ இந்த விசயத்தில் கவனக்குறைவாக இருப்பதினால் தான் திருடர்களுக்கு வசதியாக அமைந்து விடுகிறது ]
3. வீட்டில் அன்றாடம் நாம் உபயோகப்படுத்தும் பொருட்கள் யாவும் உபயோகப்படுத்திய பின் எடுத்த இடத்தில் சரியாக வைத்தோமா ? என்று சரி பார்த்துக்கொள்ளுதல். மற்றும் சமையல் எரிவாயு நிரப்பபட்ட சிலிண்டர்கள், டிவி மற்றும் வீட்டு உபயோக எலக்ட்ரானிக் பொருட்கள் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டுள்ளனவா ? என்று சரி பார்த்த பின் படுக்கை அறைக்கு செல்வது நலம். [ சில பொருட்கள் அவசியப்படும் போது தேடிக்கொண்டிருக்க வேண்டிய அவசியம் இல்லை.மற்றும் சமையல் வேலைகள் முடிந்ததும் கேஸ் [gas ] ஆப் பண்ணிவிட்டோமா என்று செக் பண்ணிக்கொள்வது மிக பாதுகாப்பாக இருக்கும் ]
4. அடுத்து சிறு குழந்தைகள் உள்ள வீட்டில் வீட்டு உபயோகத்திற்காக வாங்கி வைத்திருக்கும் விஷத்தன்மை உள்ள பொருட்களான எறும்பு மருந்து, எலி மருந்து, ஈ, கரப்பான் பூச்சிக்களை கொள்ளும் ஸ்ப்ரே ஐட்டம் , சோப்புத்தூள் சாம்பு கெரசின், பெட்ரோல் மற்றும் உட்கொள்ள ஒவ்வாதவைகளையும், மற்றும் பிளேடு, கத்தி, அரிகைமனை மற்றும் ஆபத்தை ஏற்படுத்தும் கூரிய ஆயுதங்களையும் குழந்தைகள் கண்களுக்கு தென் படாமலும் கைக்கு எட்டாத உயரத்திலும் வைக்க வேண்டும். [ சில தாய்மார்கள் பிள்ளை கேட்டு அடம்பிடிக்கிறது அழுகிறது என்று விஷத்தன்மை உள்ள ஸ்ப்ரே பாட்டில் அல்லது கூரிய ஆயுதப்பொருட்களை வேடிக்கைக்காகவும் விளையாட்டாகவும் கையில் கொடுத்து விட்டு மறந்து விடுகிறார்கள்.இது ரொம்ப ஆபத்தானவை ]
5. அலுவலகத்தில் பணி செய்வோர் அலுவலகம் செல்லுமுன் தங்களின் அத்தியாவசிய பொருட்களான மூக்குக் கண்ணாடி, செல்போன், வாட்ச், பேனா, மணிபர்ஸ், சாவி மற்றும் ஆபீஸ் சம்பந்தப்பட்ட டாக்மென்ட்ஸ் வைத்துக்கொள்ளும் பேக் என்று ஒரு சில நிமிடம் யோசித்து சரிபார்த்து செல்வது நல்லது. [ அலுவலகம் சென்ற பின்பு எடுத்து வராததை நினைத்து பதற்றம் அடைய வேண்டிய நிலை இருக்காது ]
6. வெளியூர் பயணம் செல்லும் போது பயணித்த பேரூந்தை விட்டு இறங்கும் போது நாம் கொண்டு போன பொருட்களையும் மணிபர்ஸ், செல்போன் போன்ற எளிதில் மறக்கக்கூடிய சிறு பொருட்களையும், எத்தனை பிள்ளைகள் நம்முடன் வந்தார்கள் என்பதையும் சரிபார்த்து விட்டு பயணச்சீட்டு வாங்கும் போது பாக்கி தரவேண்டி இருந்தால் நடத்துனரிடம் மறக்காமல் கேட்டு வாங்கிக்கொண்டு, முக்கியமாக பயணச்சீட்டையும் தவற விடாமல் வைத்துக்கொண்டு இறங்குவது நல்லது. அதே போல் திரும்பி வரும் போதும் சரி பார்த்துக்கொள்ளுதல் மிக்க நலமாக இருக்கும். [ சில பெற்றோர்கள், தாய்மார்கள் வீடு திரும்பி போய்க்கொண்டு இருக்கும் போது தான் யோசித்து யோசித்து அதைக்காணோம், இதைக்காணோம், பிள்ளையைக்காணோம் என்று சொல்வார்கள் ]
7. நாம் இரு சக்கர வாகனங்களிலோ அல்லது கார் போன்ற மற்ற வாகனங்களிலோ கடைதெரு, மார்கெட்டிற்கு சாமான்கள் வாங்கவோ மற்ற தேவைகளுக்கோ செல்லும் போது முக்கிய வீதிகள் வளைவுகள் குறுகிய வழிகளில் வேகத்தைக் குறைத்து இருபுறமும் பார்த்து கவனித்து செல்வது நல்லது மற்றும் தங்களுடைய வாகனங்களை நிறுத்தி வைக்கும் போது வந்துபோகும் மற்ற வாகனங்களுக்கோ, பொதுமக்களுக்கோ தொந்தரவாக இல்லாமல் ஓரமாக நிறுத்தி வைப்பது நல்லது. [ சில விபத்துக்கள் வாகனங்கள் போக்குவரத்திற்கு இடையூறாக நிறுத்தி வைப்பதால் தான் ஏற்படுகிறது. வாகன ஓட்டுனர்கள் ஒத்துழைத்தால் கூடுதல் பாதுகாப்பாக இருக்கும் ]
8. நாம் மருந்துக்கடையில் மருந்து, மாத்திரைகள் வாங்கும் போதோ அல்லது பாக்கெட்டில், பாட்டில்களில் அடைத்து சீல் வைக்கப்பட்ட பதப்படுத்தப்பட்ட திட, திரவ உணவுப்பொருள்கள் வாங்கும் போதோ அதை பயன்பாட்டின் முடிவடையும் தேதியை [ Expiry Date ] மறக்காமல் கவனித்து பார்த்து வாங்க வேண்டும். [ சில ஸ்தாபனங்களில் தேதிகள் முடிவடைந்தும் விற்பனை செய்து விடுகிறார்கள். காலாவதியான உணவுப்பொருள்களோ, மருந்து மாத்திரைகளோ உட்கொள்வதால் பக்கவிளைவுகளும் சில சமயம் உயிருக்கே ஆபத்தை விளைவிக்கவும் வாய்ப்பு உள்ளது ]
9. பெரும்பாலும் வீதிகளிலும் சரி, ஒரு சில ஹோட்டல்களிலும் சரி, தீன்பண்டங்களை சரிவர பாதுகாப்பாக மூடி வைத்து விற்பனை செய்வதில்லை எல்லாம் திறந்திருக்கும் நிலையில் வைத்துத் தான் வியாபாரம் செய்கிறார்கள். இதனால் மண், புழுதி, புகை என மாசு படிவதுடன் ஈ, கொசுக்கள் அமர்ந்து முதலில் ருசி பார்த்து விடுகின்றன. இதை கொஞ்சம் சிரமம் பார்க்காமல் பாலிதின் தாளிட்டு மூடிவைக்கலாம் அல்லது நிரந்தர வியாபாரம் செய்பவர்கள் தீன்பண்டங்கள் தெரியுமாறு கண்ணாடி பெட்டியில் வைத்து வியாபாரம் செய்யலாம். [ திறந்த வெளியில் ஈ, கொசு மொய்த்த தீன்பண்டங்களை சாப்பிடுவதால் பல நோய்கள் வர வாய்ப்பு உள்ளது. பல சாக்கடை அசுத்தங்களில் அமர்ந்து விட்டு தீன்பண்டங்களிலும் வந்து அமர்வதால் கொடிய வைரஸ் ஜுரம் மற்றும் பல உயிர் கொல்லி நோய்கள் வர காரணமாக உள்ளது ]
10. நகரின் மத்தியில் சாலைகள் நடுவில், கடைத்தெரு ஆகிய பொது இடங்களில் காரித்துப்புவது, மூக்குசிந்துவது,சுகாதாரக்கேடான அசுத்தம் செய்வது தேவையற்ற குப்பைகூலங்களை ஆங்காங்கே கண்ட கண்ட இடங்களில் தூக்கி போடுவது மற்றும் மக்கள் நடமாடும் பகுதி, குடியிருப்பு பகுதி, நகர்ப்புற சாலையோரம் போன்ற இடங்களில் அசுத்தம் செய்வது மலஜலம், சிறுநீர் கழித்தல் போன்றவைகளை முடிந்தவரை தவிர்த்துக்கொண்டால் சுகாதாரக்கேட்டிலிருந்து விடுபடலாம். [ நம் வசிப்பிடங்களையும், வசிக்கும் ஊர்களையும் அவரவர் பங்குக்கு முடிந்தவரை அசுத்தம் செய்யாமல் இருந்தாலே எந்த டெங்கு காய்ச்சலும் கிட்டே வராது. சுத்தமும் சுகாதாரமும் இன்மையே எல்லா நோய்களுக்கும் காரணம் ]
மேற்கண்ட 10 டிப்ஸ்களை நாம் முடிந்தவரை கடைபிடிக்க முயற்சிப்போம்.
2 comments:
அருமையான 10 டிப்ஸ்கள். தம்பி அதிரை மெய்சா
நன்றி. உங்கள் ஆக்கம் இன்னும் தேவை!!
அருமையான 10 டிப்ஸ்கள்.
நன்றி.
Post a Comment
உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் பதியப்படாது.
பொது இடத்தில் தங்கள் கருத்துகளைப் பதியும்போது அல்லாஹ் நம்மைக் கண்காணித்துக் கொண்டுள்ளான் என்பதை மனதில் இருத்தி,தனிப்பட்ட முறையில் எவரையும் புண்படுத்தாத வகையில் தங்கள் கருத்துகளைப் பதியுங்கள்.
கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
புரிதலுடன் கூடிய உங்களது ஒத்துழைப்புக்கு நன்றி!