கூட்டுக் குடும்பம் VS தனிக் குடும்பம்...




கூடி வாழ்ந்தால் கோடி நன்மை என்று ஒரு பழமொழி சொல்வார்கள். ஆனால் இன்றோ கூடி வாழ்ந்தால் கோடி இன்னல் என்று நினைக்கிறார்கள். தனிக் குடும்பத்திற்கு முக்கியத்துவம் கொடுத்து வாழ ஆசைப்படுகிறார்கள் கூட்டுக் குடும்பம் என்பது இக்காலத்தில் அரிதிலும் அரிதாகி விட்டது. அதன் பின் விளைவுகளை இன்று நாம் பல விதத்தில் காண முடிகிறது. தனிக்குடும்ப வாழ்வில் நாம் மட்டும் விலகி நிற்க வில்லை. அன்பு, பாசம், நேசம் யாவற்றிலிருந்தும் சிறிது சிறிதாக விலகி தூரமாக்கப்பட்டு விடுகிறோம்.

முன்பொரு காலத்தில் அநேக குடும்பங்கள் கூட்டுக் குடும்பமாகவே வாழ்ந்து வந்தோம். கூட்டுக் குடும்பங்களில் சிறு சிறு பிரச்சனைகள் வரத்தான் செய்யும். இல்லை என்று சொல்ல முடியாது. ஆனால் பெரிய அளவில் பாதிப்புக்கள் வராது. வந்து மறையும் பிரச்சனைகளாகத்தான் இருக்கும். கூட்டுக்குடும்பம் நம் வாழ்வில் எத்தனையோ விதத்தில் பயனுள்ளதாகவும், பலமாகவும், பலனாகவும் இருக்கிறது. கூட்டுக் குடும்மாய் வாழ்வதினால் நமக்கு முதலில் சொல்லப்போனால் நம் உடமைக்கும் பொருளுக்கும் குழந்தைகளுக்கும் பாதுகாப்பு இருக்கிறது. 

அது மட்டுமின்றி வீட்டு வேலைகளை பகிர்ந்து செய்து கொள்ள முடிந்தது. ஒரு நிகழ்ச்சியானாலும், ஒரு பிரச்சனையானாலும் கலந்து ஆலோசித்து நல்ல முடிவு எடுக்க உதவியது. சமையல் எல்லோருக்கும் ஒன்றாக ஒரே சமையலாய் சமைப்பதன் மூலம் வீண்விரயம் ஆகாமல் இருந்தது. செலவினங்களும் குறைந்தது. ஏதாவது அசம்பாவிதங்கள் நடந்தால் காப்பாற்ற, உதவி செய்ய ஆள் இருந்தது. குழந்தைகளை பராமரித்து பாசம் காட்ட தாத்தா, பாட்டி இருப்பார்கள். கொஞ்சிப்பேசி மகிழ்ந்து விளையாட தாய் மாமன் இருப்பார். தூக்கி அணைத்து தூரத்து நிலாவை காண்பித்து அழுகையை நிறுத்த தன் தங்கை இருப்பாள். இப்படி அந்தக்குழந்தை பாசத்துடன் வளர பேருதவியாக அனைவரும் இருப்பர். ஒரு தலைமைக்கு கட்டுப்பட்டு ஒழுக்கமாக, கண்ணியமாக, கௌரவமாக வாழ வழிவகுக்கிறது. பிள்ளைகளுக்கும் பயம், மரியாதை, எதையும் யோசித்து செய்தல், வேண்டாத நட்பு என்று பல பின்னணியில் யோசித்து ஒவ்வொரு காரியமும் செய்யும் சூழல்இருந்தது. தாய், தந்தை, அண்ணன், தம்பி, அக்கா, தங்கை, மாமன், மச்சான், மனைவி, மக்கள் என்று கூட்டுக் குடும்பமாய் வாழ்ந்த காலத்தில் உடலளவிலும் மனதளவிலும் பாதிப்பு இல்லாமல் வாழ்ந்து வந்தோம். காரணம் கூட்டுக் குடும்பத்தில் அன்பு, பாசம், நட்பு, மரியாதை என்று இருந்தது. ஆனால் தனிக் குடும்பத்திலோ வெறுப்பு, தாழ்வு மனப்பான்மை, துவேசம், காழ்ப்புணர்ச்சி, பொறாமை ஆகியவையே புரையோடிக்கிடக்கிறது. காரணம் குடும்ப நட்பு இல்லாமை அதன் ஏக்கத்தின் தாக்கமே தான். 

இப்படி ஒவ்வொரு விதத்திலும் நமக்கு சிறப்பானதாக சிறந்து விளங்கிய கூட்டுக்குடும்பம் இன்றைய காலகட்டத்தில் தனிக்குடித்தனமாக உருவாகி விட்டதால் எல்லாவற்றிலுமே நாம் மாற்றங்களை காண முடிகிறது. கூட்டு குடும்ப வாழ்வை விட்டு தனி குடும்பம் என்று போன பிறகு நாம் பல இன்னல்களை சந்திக்க வேண்டி இருக்கிறது. அதாவது ஒரு கணவன், ஒரு மனைவி, ஒன்றோ இரண்டோ பிள்ளைகள் என்று இருக்கும் போது கணவனோ, மனைவியோ, வேலைக்கு சென்று விடுவார்கள். பிள்ளை கைக்குழந்தையாக இருந்தால் குழந்தைகளை பார்த்துக்கொள்ளும் [ baby sitter ] காப்பகத்தில் விட்டு செல்வார்கள். பள்ளி செல்லும் பிள்ளைகளாக இருந்தால் பள்ளிக்கு அனுப்பி வைத்து விடுவார்கள்.அவர்கள் திரும்பி வரும் வரை வீடு பாதுகாப்பாற்ற நிலையில் இருக்கும் அடுத்த நாள் செய்தித்தாளில் பட்டப்பகலில் பூட்டிய வீட்டில் நகை பணம் கொள்ளை என்று செய்தி வரும். அல்லது கணவன் வேலைக்கு சென்று விட்டாலோ அல்லது வெளியூர், வெளி நாடு என்று சென்று விட்டாலோ தனிமையில் இருக்கும் சூழ்நிலை ஏற்படும். அச்சூழ்நிலையை சாதகமாக்கிக் கொண்டு சில விஷமிகள் சல்லாபத்திற்கோ, அல்லது முன் விரோதத்தின் காரணமாக கொலை, கொள்ளை போன்ற கொடுஞ்செயலுக்கோ ஆளாக நேரிடும். இதற்கெல்லாம் அடிப்படை காரணம் தனிக்குடும்பம் என்று விலகியதே...!

அடுத்து சொல்லப்போனால் கூட்டுக் குடும்பமாய் வாழ்ந்த காலத்தில் விவாகரத்து என்பது விரல் விட்டு என்னும் அளவுக்குத்தான் அரிதாக நடந்தது. ஆனால் இன்றோ சர்வ சாதாரணமாக விவாகரத்து நடைபெறுவதை பார்க்க முடிகிறது. சின்ன சின்ன பிரச்சனைகளை எல்லாம் நேருக்கு நேர் உணர்ச்சி வசப்பட்டு பேசிக் கொள்வதால் அவசரத்தில் எடுக்கும் முடிவு வாழ்க்கையை சின்னா பின்னமாகி விடுகிறது. இதே கூட்டுக் குடும்பத்தில் யோசித்து பேசத்தோன்றும். மனதில் பயம் இருக்கும். பெரியவர்கள் சொல்லுக்கு கட்டுப்படும் சூழல் ஏற்பட்டு விடும். இரொண்டொரு நாளில் சமரசமாகி சந்தோசமாக வாழ்வார்கள். 

அடுத்து தனிமையில் இருக்கும் போது நம் சிந்தனை வாழ்க்கையை வெவ்வேறு கோணத்தில் சிந்திக்க தூண்டுகிறது இதன் தாக்கமே தற்கொலை செய்து கொள்ள தூண்டுகிறது. தனிமையில் இருப்பதால் சிலருக்கு மனநோய் ஏற்படுகிறது. தக்க சமயத்தில் ஆறுதல் சொல்லுக்கு ஆளில்லாமல் அது உடலையும், மனதையும் மிகவும் பாதிப்படையச்செய்து தூக்கம், பசி இன்மையால் நிம்மதி இழந்து உடல் சோர்ந்து மெலிந்து நோய் வாய்ப்பட்டு இறக்க நேரிடுகிறது. அடுத்து அன்று கூட்டுக் குடும்பமாய் வாழ்ந்த காலத்தில் முதியோர் இல்லம் என்று ஒன்று இருந்ததா...? இல்லை. இன்றோ புதிது புதிதாக காணும் இடங்களிலெல்லாம் முதியோர் இல்லம் என்று முளைத்து வந்து கொண்டிருக்கிறது. நம் பிள்ளை முதுமையில் அரவணைத்து காப்பான் என்று நம்பியிருந்த தாய்,தந்தையையே பாரமாக நினைத்து முதியோர் இல்லத்தில் விட்டுச்செல்லும் அவல நிலையை காண்கின்றோம். இதற்கு காரணம் தனிக்குடும்பம் என்று போய் விட்டதால் தானே இச்சூழ்நிலை உருவாகியது. இப்படி இன்னும் ஏராளமாக கூட்டுக்குடும்பத்தின் நலனையும் ,தனிக்குடும்பத்தின் பாதிப்புக்களையும் சொல்லிக்கொண்டே போகலாம். 

எந்தக்கோணத்தில் பார்த்தாலும் தனிக்குடும்பத்தை விட கூட்டுக்குடும்பமே பாதுகாப்பையும் குடும்ப உறவை மேம்படுத்தவும் உதவுகிறது. ஆகவே கூடி வாழ்ந்து கோடி நன்மைகள் பெறாவிட்டாலும் கொஞ்ச நன்மைகளாவது கூடுதலாக பெற்றிட கூட்டுக் குடும்பமாய் வாழ்ந்து நாம் அனைவரும் மகிழ்வுடன் இருக்க முயற்சிப்போமாக...!!!

நன்றி:அதிரை மெய்சா                                              



4 comments:

அப்துல் ஜலீல்.M said...

அருமையான பதிவுக்கு மிக நன்றி

Unknown said...

அருமையான பதிவுக்கு மிக நன்றி

Linda Tony said...

Your article is very interesting, thank you for sharing it. We can exchange information indefinitely. Be sure to keep going. https://cracked4pc.com/lightburn-crack/

RRB07 said...

அருமையான பதிவு

Post a Comment

உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் பதியப்படாது.

பொது இடத்தில் தங்கள் கருத்துகளைப் பதியும்போது அல்லாஹ் நம்மைக் கண்காணித்துக் கொண்டுள்ளான் என்பதை மனதில் இருத்தி,தனிப்பட்ட முறையில் எவரையும் புண்படுத்தாத வகையில் தங்கள் கருத்துகளைப் பதியுங்கள்.

கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

புரிதலுடன் கூடிய உங்களது ஒத்துழைப்புக்கு நன்றி!