தமிழகத்தில் ஆதார் எண் உருவாக்கும் பணி, அக்டோபர், 31ம் தேதியுடன்
முடிகிறது. இதன்பின், ஆதார் எண் வேண்டுவோர், நவம்பர் முதல் துவங்கப்படும்,
நிரந்தர ஆதார் அட்டை வழங்கும் மையங்கள் மூலம் பெற்றுக் கொள்ளலாம்.
பெல் நிறுவனம் : தமிழகம் முழுவதும் ஆதார் எண் உருவாக்கும் பணி, "பெல்' பொதுத்துறை நிறுவனத்திடம், ஒப்பந்த அடிப்படையில் வழங்கப்பட்டது. அந்த நிறுவனம், ஆறு தனியார் நிறுவனங்களுக்கு, இப்பணியை துணை ஒப்பந்தமாக அளித்துள்ளது. துணை ஒப்பந்தம் பெற்ற நிறுவனங்கள், மாநிலம் முழுவதும், பயிற்சி பெற்ற 2,000 பணியாளர்களைக் கொண்டு, ஆதார் எண் உருவாக்கும் பணியை, 2012 மார்ச் முதல், பல்வேறு கட்டங்களாக துவங்கி, நடத்தி வருகின்றன.
3.95 கோடி பேர் : தமிழகத்தின், 32 மாவட்டங்களில், 2013, ஆகஸ்ட், 23ம் தேதி வரை, 3.95 கோடி பேருக்கு, ஆதார் எண் உருவாக்கப்பட்டுள்ளது. இதில், அதிகபட்சமாக, அரியலூர் மாவட்டத்தில், 80 சதவீதம் பேருக்கு, ஆதார் எண் உருவாக்கப்பட்டுள்ளது.
50 சதவீதத்துக்கும் குறைவு : சிவகங்கை, திண்டுக்கல், கிருஷ்ணகிரி, காஞ்சிபுரம், நெல்லை, திருவண்ணாமலை மாவட்டங்களில், 50 முதல் 60 சதவீதம் பேருக்கு, ஆதார் எண் உருவாக்கப்பட்டுள்ளது. நீலகிரி, கோவை, திருவள்ளூர், திருப்பூர், சென்னை மாவட்டங்களில், ஆதார் எண் உருவாக்கும் பணி தாமதமாக துவங்கியதால், 50 சதவீதத்துக்கும் குறைவாகவே பதிவுகள் செய்யப்பட்டு உள்ளன.
எனவே, 50 சதவீதத்துக்கு மேல் ஆதார் எண் உருவாக்கப்பட்ட மாவட்டங்களில், ஆதார் மையங்கள், இம்மாதமே மூடப்படுகிறது. 50 சதவீதத்துக்கும் குறைவாக ஆதார் எண் உருவாக்கம் நடந்துள்ள பகுதிகளில், அக்டோபர், 31ம் தேதி வரை, ஆதார் மையங்கள் செயல்படும்.
நிரந்தர மையம் இதுகுறித்து, ஆதார் எண் உருவாக்கத் திட்ட இணை இயக்குனர் கிருஷ்ணா ராவ்
கூறியதாவது: இதுவரை 50 சதவீதத்துக்கும் அதிகமாக ஆதார் எண் உருவாக்கிய மையங்கள் ஆகஸ்ட் மாதமே மூடப்படுகின்றன. 50 சதவீதத்துக்கும் குறைவாக பதிவாகியுள்ள மையங்கள் அக்டோபர் 31ம் தேதி வரை செயல்படும். அதற்குள், ஆதார் எண் உருவாக்க பொதுமக்கள் பதிவு செய்து கொள்ளலாம். நவம்பர் மாதம் முதல் ஆதார் எண் உருவாக்கும் மையங்கள் நிரந்தரமாக செயல்படும். கலெக்டர் அலுவலகம், வட்டாட்சியர் அலுவலகங்கள், மாநகராட்சி மண்டல அலுவலகங்களில் நிரந்தர மையங்கள் அமைக்கப்படும். இதில், விடுபட்டவர்கள் பதிவு செய்யலாம். தற்போது முடிந்துள்ள பணியில், பெயர் உள்ளிட்ட விவரங்கள் தவறாக இருந்தால், அதையும் நிரந்தர மையங்களில் திருத்திக் கொள்ள விண்ணப்பங்கள் அளிக்கலாம்.
அக்டோபர் மாதம் வரை செயல்படும் மையங்கள் மூலம், மேலும் ஒரு கோடி பேருக்கு ஆதார் எண் உருவாக்கப்படும் என, நம்புகிறோம். இறுதியாக, தமிழகத்தின் மொத்த மக்கள் தொகையில், 4.75 கோடி பேருக்கு ஆதார் எண் உருவாக்கப்படும். விடுபட்ட 1.50 கோடி பேருக்கு, நிரந்தர மையங்களில், ஆதார் எண் உருவாக்கப்படும். இவ்வாறு, கிருஷ்ணா ராவ் கூறினார்.
ஒப்புகை சீட்டு முக்கியம் : மக்கள் தொகை கணக்கெடுப்பு, 2011ல் நடந்தபோது, அளிக்கப்பட்ட ஒப்புகை சீட்டை கொண்டே, ஆதார் எண் உருவாக்கும் பணி நடக்கிறது. இதற்கு, மாற்றாக வேறு ஆவணங்கள் ஏற்றுக் கொள்ளப்படுவதில்லை. ஒப்புகை சீட்டை தொலைத்தவர்கள், ஒப்புகை சீட்டு இல்லாதவர்கள், தற்போது அமைத்துள்ள மையங்கள் மூலம், ஆதார் எண்ணை உருவாக்க முடியாது. இவர்கள், நிரந்தர மையங்கள் அமைக்கப்பட்ட பின், பதிவுக்காக அளிக்கப்படும் தனி விண்ணப்பங்களை பூர்த்தி செய்து, ஆதார் எண்ணை உருவாக்கிக் கொள்ளலாம்.
சென்னை நிலை என்ன? : சென்னை மாநகராட்சியை, விரிவுபடுத்துவதற்கு முன் இருந்த, 155 வார்டுகளில் மட்டும் மாநகராட்சி தகவல்களின் படி ஆதார் எண் உருவாக்கப்படுகிறது. புதிதாக உருவாக்கப்பட்ட, மாநகராட்சி வார்டுகளுக்கு, அவை ஏற்கனவே இருந்த மாவட்டங்களின் கணக்குப்படி ஆதார் எண் ஏற்படுத்தும் பணி நடக்கிறது. இதன்படி, பழைய, ஏழு மண்லங்களுக்கு மட்டும், மாநகராட்சி தகவல் அடிப்படையில் பணிகள் நடக்கின்றன. இதில், தண்டையார் பேட்டை - 58, ராயபுரம் - 63, அயனாவரம் - 17, அண்ணாநகர் - 23, நுங்கம்பாக்கம் - 51, கோடம்பாக்கம் - 48, அடையாறு மண்டலத்தில், 7 சதவீதம் பேருக்கே, ஆதார் எண் உருவாக்க பயோ மெட்ரிக் பதிவுகள் செய்யப்பட்டுள்ளன. இந்த, ஏழு மண்டலங்களில், அக்டோபர், 31ம் தேதி வரை ஆதார் மையங்கள் செயல்படும். அடையாறு மண்டலத்தில், ஜூலை, 10ம் தேதி தான் ஆதார் பணிகள் துவங்கின. அதுவும், சில வார்டுகளில் ஆதார் மையங்கள் இனிமேல் தான் அமைக்கப்பட உள்ளன.
1 comments:
பயனுள்ள தகவல்கள் நிறைந்த பதிவு . பாராட்டுக்கள். ஜசாக் அல்லாஹ்
Post a Comment
உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் பதியப்படாது.
பொது இடத்தில் தங்கள் கருத்துகளைப் பதியும்போது அல்லாஹ் நம்மைக் கண்காணித்துக் கொண்டுள்ளான் என்பதை மனதில் இருத்தி,தனிப்பட்ட முறையில் எவரையும் புண்படுத்தாத வகையில் தங்கள் கருத்துகளைப் பதியுங்கள்.
கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
புரிதலுடன் கூடிய உங்களது ஒத்துழைப்புக்கு நன்றி!