அமீரகத்தில் பாஸ்போர்ட் தொலைந்தால் என்ன செய்ய வேண்டும்?



பாஸ்போர்ட்டை தொலைக்கும் வெளிநாட்டு பிரஜைகள் உடனடியாக அருகிலிருக்கும் போலீஸ் நிலையத்தில் புகார் தர வேண்டும். போலீஸார் தரும் சான்று கடிதத்தை பெற்றுக் கொண்டவர்கள் அமீரக இமிக்கிரேசன் அலுவலகங்களில்  (General Directorate of Residency & Foreigners Affairs - GDRFA) அதை சமர்ப்பித்து அந்தக் கடிதங்களில் மேல் இமிக்கிரேசன் ஸ்டாம்பை பதிந்து உங்களுடைய விசா நிலையை தெரிவிக்கும் பிரதி சான்றிதழை தருவார்கள்.


இந்த சான்றிதழை பெற்றுக் கொண்டவர்கள் தங்களுடைய தூதரகங்களில் சமர்ப்பித்து மாற்றுப் பாஸ்போர்ட் வேண்டி விண்ணப்பிக்க வேண்டும். புதிய பாஸ்போர்ட்டை பெற்றுக் கொண்டவர்கள் மீண்டும் இமிக்கிரேசன் அலுவலகம் (GDRFA) சென்று உங்களுடைய விசா ஸ்டாம்பை அதில் ஏற்றிக் கொள்ள வேண்டும்.

தொலைந்த பாஸ்போர்ட்டுக்கு பதில் மாற்று பாஸ்போர்ட் பெற என்னென்ன ஆவணங்கள் தேவை:
புதிதாக எடுக்கப்பட்ட பாஸ்போர்ட் சைஸ் புகைப்படங்கள் 2
காணாமல் போன பாஸ்போர்ட்டின் நகல் 1 (இருந்தால்)
சிறுவர்களுடைய பாஸ்போர்ட் காணாமல் போயிருந்தால் கண்டிப்பாக பெற்றோர்களில் ஒருவராவது வருகை தர வேண்டும்

கம்பெனி ஸ்பான்சர் விசாவின் கீழ் இருப்பவர்கள் கம்பெனி லெட்டர் பேடில் கம்பெனி முத்திரையுடன் பாஸ்போர்ட் காணாமல் போனது குறித்த லெட்டர், கம்பெனி டிரேட் லைசென்ஸ் காப்பி, எஸ்டாபிளிஷ்மெண்ட் கார்டு காப்பி (Establishment Card) ஆகியவைகளை இணைக்க வேண்டும்

வெளிநாட்டினரின் (தனிநபர்) ஸ்பான்சர் விசாவின் கீழுள்ள உறவினர்களாக இருப்பின் ஸ்பான்சர் செய்தவருடைய கையொப்பமிட்ட லெட்டர் மற்றும் அவருடைய பாஸ்காப்பியை இணைக்க வேண்டும்.

வழிமுறை:
பாஸ்போர்ட் தொலைந்த பகுதியின் அருகாமையிலுள்ள போலீஸ் நிலையத்திற்கு முதலில் செல்ல வேண்டும். அங்குள்ள விண்ணப்ப பாரத்தை பூர்த்தி செய்து மேற்கூறப்பட்ட ஆவணங்களை அத்துடன் இணைத்து தர வேண்டும். பின்பு போலீஸ் தரும் ஆவணத்தை பெற்றுக் கொண்டு மேலும் 3 அரசு அலுவலகங்களில் ஒப்புதல் பெற வேண்டும்.

போலீஸ் தரும் ஆவணத்துடன் முதலில் துபை நீதிமன்ற வரவேற்பறைக்கு (Dubai Courts Reception) சென்று அதை தாருங்கள், அவர்கள் அந்த ஆவணத்தை தங்களது கம்ப்யூட்டரில் பதிந்து கொண்டு அந்த ஆவணத்தின் மீது தங்களுடைய முத்திரையை பதிந்து தருவார்கள், இதற்காக கட்டணம் ஏதும் செலுத்தத் தேவையில்லை.

அடுத்து, துபை நீதிமன்றத்தை அடுத்துள்ள பப்ளிக் பிராசிகியூசன் டிப்பார்ட்மெண்டிற்கும் (Public Prosecution Dept) சென்று மேற்கூறியவாறே ஆவணத்தை சமர்ப்பித்து அவர்களின் முத்திரையையும் கட்டணம் இன்றி பெற்றுக் கொள்ளுங்கள்.

மூன்றாவதாக, ஜெனரல் டைரக்டரேட் ஆப் ரெஸிடென்ஸி அன்ட் பாரீன் அபயர்ஸ் எனும் இமிக்கிரேசன் அலுவலகத்திற்கு  (General Directorate of Residency & Foreigners Affairs - GDRFA) சென்று 20 திர்ஹம் கட்டணம் செலுத்தி அங்கும் போலீஸ் அறிக்கையின் மீது அவர்களுடைய முத்திரையை பெற்றுக் கொள்ளுங்கள்.

3 இடங்களிலும் முத்திரையை பெற்றுக் கொண்ட ஆவணத்தை மீண்டும் அதே போலீஸ் நிலையத்தில் தாக்கல் செய்தால் அவர்கள் 'பாஸ்போர்ட் காணாமல் போய்விட்டது' என்று உறுதிசெய்த சான்றிதழை அரபியில் தருவார்கள்.

அந்த அரபி சான்றிதழை எடுத்துக் கொண்டு உங்களுடைய நாட்டு தூதரகத்தில் அவர்கள் சட்டப்படி கேட்கும் ஆவணங்களுடன் இணைத்து சமர்பிக்கவும். சில நாடுகளின் தூதரகங்கள் அவர்கள் நாட்டு மொழியில் அந்த போலீஸ் சான்றிதழை சட்டப்படி மொழிமாற்றம் செய்து தரக் கோருவார்கள்.

தூதரகம் உங்களுக்கு மாற்று புதிய பாஸ்போர்ட் வழங்கியவுடன் அதை மீண்டும் இமிக்கிரேசன் அலுவலகத்தில்  (General Directorate of Residency & Foreigners Affairs - GDRFA) சமர்ப்பித்தால் அவர்கள் பாஸ்போர்ட்டில் விசாவை பதிந்து தருவார்கள்.

தனிநபர்களால் ஸ்பான்சர் செய்யப்பட்டுள்ள உறவினர் மற்றும் துணைவர்களுக்கான வழிகாட்டல்:
தனிநபர்களால் விசா ஸ்பான்சர் செய்யப்பட்டவர்களின் பாஸ்போர்ட் காணாமல் போனது குறித்து புகார் செய்ய தனிநபர் ஸ்பான்சரின் பாஸ்போர்ட் காப்பி, பாஸ்போர்ட்டை தொலைத்தவரின் பாஸ்போர்ட் காப்பி மற்றும் போலீஸாரால் அரபியில் வழங்கப்பட்ட சான்றிதழ் ஆகியவற்றுடன் அதே பாஸ்போர்ட்டின் கீழ் வேறு யாருடைய பெயராவது இணைக்கப்பட்டிருந்தால் அவர்களுடைய பெயர் மற்றும் பாஸ்போர்ட் எண்ணையும் குறிக்க வேண்டும் (அப்படி யாராவது இருந்தால் மட்டும்)

சிறார்களுக்கான வழிகாட்டல்கள்:
சிறார்களுடைய பாஸ்போர்ட் தொலைந்திருந்தால் அவர்களுக்கு ஸ்பான்சர் செய்திருந்த தாய் அல்லது தந்தை கட்டாயம் நேரில் போலீஸ் ஸ்டேஷனுக்கு வர வேண்டும். போலீஸார் அதனையொட்டி மேற்காணும் 3 இடங்களில் முத்திரை பெறுவதற்கான கடிதத்தை வழங்குவார்கள்.

சிறப்பு குறிப்புக்கள்:
ஸ்பான்சர் செய்யப்பட்டுள்ளவர் ஒருவேளை செமி கவர்ன்மெண்ட் நிறுவனத்தில் (Semi Government Company) பணியாற்றினால் செல்லத்தக்க (Valid) எஸ்டாபிளிஷ்மெண்ட் கார்டின் காப்பியையும்,

ஸ்பான்சர் செய்யப்பட்டுள்ளவர் தனியார் நிறுவனத்தில் பணியாற்றினால் செல்லத்தக்க கமர்ஷியல் லைசென்ஸ் காப்பி மற்றும் செல்லத்தக்க எஸ்டாபிளிஷ்மெண்ட் கார்டின் காப்பிகளை இணைக்க வேண்டும்.

கட்டண விபரங்கள்:
தொலைந்து போன விசா விபரங்களை மீண்டும் புதிய பாஸ்போர்டில் பதிய ஈ-பார்ம் வழியாக 170 திர்ஹம் செலுத்த வேண்டும், எஞ்சிய ஒவ்வொரு ஆண்டுக்கும் கூடுதலாக தலா 100 திர்ஹம் செலுத்த வேண்டும்.

ஒருவேளை பாஸ்போர்ட் அமீரகத்திற்கு வெளியே தொலைந்து போயிருந்தால் ஸ்பான்சர் பழைய விசாவை ரத்து செய்து விட்டு புதிய விசா பெர்மிட்டுக்கு புதிய பாஸ்போர்ட் விபரங்களின்படி விண்ணப்பிக்க வேண்டும்.

பாஸ்போர்ட்டை அமீரகத்திற்கு வெளியே தொலைத்தவர்கள் உடனடியாக சம்பந்தப்பட்ட நாட்டின் தூதரகத்தை உடனடியாக தொடர்பு கொண்டு விசா பெர்மிட்டை பெறுவதற்கு முயற்சிக்க வேண்டும்.

குறிப்பு: அமீரகத்தில் சந்தர்ப்பவசத்தால் பாஸ்போர்ட்டை தொலைக்கும் அனைத்து நாட்டு பிரஜைகளுக்குமான பொதுவழிகாட்டல் இது. அந்தந்த நாட்டின் தூதரகத்திற்கு தேவையான ஆவணங்களைப் பற்றி சம்பந்தப்பட்ட தூதரகங்களை அணுகி விசாரித்துக் கொள்ளவும்.
 

0 comments:

Post a Comment

உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் பதியப்படாது.

பொது இடத்தில் தங்கள் கருத்துகளைப் பதியும்போது அல்லாஹ் நம்மைக் கண்காணித்துக் கொண்டுள்ளான் என்பதை மனதில் இருத்தி,தனிப்பட்ட முறையில் எவரையும் புண்படுத்தாத வகையில் தங்கள் கருத்துகளைப் பதியுங்கள்.

கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

புரிதலுடன் கூடிய உங்களது ஒத்துழைப்புக்கு நன்றி!